marshal nesamony

Father of Kanyakumari District

மண்டைக்காட்டு பகவதி பொன்னம்மை நாடாச்சி

பின்னூட்டமொன்றை இடுக

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலானது பொன்னம்மை நாடாத்தியின் சமாதியில் எழுந்த ஒரு கோவிலாகும். இவ்விடம் முற்காலங்களில் பனங்காடாக இருந்தது. இது பருத்திவிளை பொன்னையா நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான இடமாகும் இங்கு அடர்ந்த பனங்காடுகள் காணப்பட்டதால், நாடார் மக்கள் பதநீர் இறக்கும் தொழிலை செய்தவர்களில் அனந்தன் நாடாரும் ஒருவராவார். மக்கள் பெருக்கம் அதிகமாக இல்லாத காலமாகையால் மக்கள் நடமாட்டம் இவ்விடத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அனந்தன் இறக்கி வைக்கும் பதிநீரை மனைவி பொன்னம்மை குடிசைக்கு எடுத்துச் சென்று காய்ச்சி கருப்புக் கட்டியாக்குவது அவர்களின் அன்றாடப்பணியாகும். இது தினந்தோறும் நடந்து வந்த தொடர் நிகழ்ச்சியாகும்.

நாடார் மக்களின் குல தெய்வம் பத்திரகாளி என்பது அனைவரும் அறிந்ததே. இதை மலையாளிகள் “பகவதியென்று” அழைப்பது வழக்கம். பனையேறும் நாடார் தொழிலாளிகள் பருவ காலத்தில் (season)  முதல் முதலாவதாக இறக்கும் பதிநீரை பத்திரகாளிகுப் படைத்த பிறகுதான் தங்களது வீட்டுற்கு எடுத்துச் செல்பதை ஒரு மரபாக இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். கிறிஸ்தவரானாலும், இந்துவானாலும் இச்சடங்கை, பதிநீர் இறக்கும் அனைத்து நாடார் மக்களும் இன்றளவும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். ஒரு பருவகாலத்தில், வழக்கம் போல் அனந்தன் நாடார் பதிநீரை இறக்கி வைத்துவிட்டு, படையல் ஒழுங்குகளையும் செய்துவிட்டு, குளித்து சுத்தம் ஆவதற்கென்று அருகாமை ஓடைக்குச் சென்றார். அவ்வேளையில் அன்னாரது மனைவி பொன்னம்மை பதிநீரை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அங்கு வந்தார்கள். படையல் எல்லாம் முடித்து விட்டு கணவன் சென்று விட்டார் என்று எண்ணிய பொன்னம்மை பதிநீரை எடுத்து குடிசை வீட்டிற்கு வந்துவிட்டார். குளித்து விட்டு திரும்பிய அனந்தன் பதிநீரை காணாததால் திடுக்கிட்டார். படையல் செய்வதற்கு முன் பதிநீரை எடுத்துச் செல்வது நெறி தவறிய செயலாகும்.  எனவே அவர் மனம் வெதும்பியது. இந்நிலையில் குடிசைக்குச் சென்றார். அங்கு பதிநீரை மனைவி எடுத்து வந்து அடுப்பேற்றி இருந்ததைக் கண்டு சினம் கொண்டார். விவரம் அறியாத பொன்னம்மை அவரின் கோபத்திற்கு காரணம் என்ன என்று வினைவினாள். “காரணமாக கேட்கிறாய்” அம்மனுக்கு படையல் வைக்கும் முன் யார் உன்னை பதிநீரை எடுத்து வரச் சொன்னது’ என்று சத்தமிட்டு, ஆத்திரத்தால் பெண்பனைப்பூவை பதப்படுத்தும் கடிப்பு ஆயுதத்தால் ஓங்கி தலையில் அடித்துவிட்டார். மண்டையில் பலமாக இறங்கிய அடியால் பொன்னம்மை இரத்த வெள்ளத்தில் மிதந்தாள். சிறிது நேரத்தில் அவள் உயிர் பிரிந்தது. எதிர்பாராத இக்கொலையைக் கண்ட அனந்தன் நிலைகுலைந்து தடுமாறிப் போனார். ஊராருக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடி தலைமறைவானார். இக்காலங்களில் அவர் கொல்லம் (தேசிங்க நாடு) சென்று வேடத்தில் (பண்டாரம் போன்று) புலையர் மத்தியில் தங்கியிருக்கலானார்.

காலங்கள் பல உருண்டோடின. ஆனாலும் தனது மனைவியை அநியாயமாகக் கொலை செய்த நிகழ்ச்சியை நினைத்து மனம் நொந்த வண்ணமிருந்தார். எப்படியாவது திரும்பும் பருத்திவிளை பனங்காட்டிற்கு வந்து மனைவியின் பூத உடல் என்னவாயிற்று என்று அறந்திட ஆர்வம் கொண்டு, ஒரு பண்டார (சன்னியசி) வேடமணந்து, பனங்காட்டிற்கு வந்தார்.

இதற்கிடையில் பொன்னம்மையின் பிணத்தை ஊரார் புதைத்து விட்டனர். இந்த புதைகுழியின் அருகாமையில் கடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அக்கிணறு இன்றும் உள்ளது. அக்கிணற்றில் ஊர் பெண்கள் தண்ணீர் எடுத்துவரச் செல்வது வழக்கம். பொன்னமையின் இந்த அகால மரணத்தால் அவரது ஆவியானது சில இளம் பெண்களை தொந்தரவு செய்து, சாமி ஆடினதாக பெரியார்கள் இன்றும் கூறுகின்றனர். இதனால் கலவரமுற்ற சுற்றத்தார், பொன்னம்மையின் ஆவியை சாந்தப்படுத்துவதற்காக அன்றைய பழக்க வழக்கங்களின் அடிப்படையில், ஒரு படையல் போட்டனர். இப்படையல் அவள் இறந்த நாளான மாசி மாதம் 20-ம் நாள் போடப்பட்டது. அவளது புதை குழிக்கரையில் படையல் வைக்கப்பட்டது.

இவ்வாறான படையல்களை அக்காலங்களில் மிருகங்களினால் அடித்துக் கொல்லப்பட்டவர்களின் ஆன்ம சாந்திக்காகப் படைப்பது தமிழர் பண்பாடாக இருந்திருக்கிறது.

“Pentops fpr those killed by tigers are erected at the noundary of the village out of heaps of stones. (Cairns) at the centre of which are inserted poles ornamented at the top with branches of grass or feathers of peacock or jumgle cock. These cairns are treated as shrines and annual offerings are made at the site by the family members of the deceased, Such cairns are referred to in sangam songs as patukkai. Akam 19:10 says that these are heaps of stones while akam 109:8 says they are decorated by branches (talai jio)

(On the original of cheras and the wandering vanchi by K.C. Ravi varma P. 54-55)

எனவே “படுக்கை” என்பது அகால மரணமடையும் நபர்களின் சமாதியில் ஆண்டுதோறும் அன்னாரின் குடும்பத்தாரால் செய்யப்படும் ஒரு சடங்காகும். இச்சடங்கைத்தான் மண்டைக்காட்டிலும் வருடாவருடம் பொன்னம்மையின் குடும்பத்தார் இணைந்து அவளது சமாதி (புதை குழியில்) செய்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிப்போன பொன்னம்மையின் கணவரான அனந்தன் கொல்லம் சென்று மறைந்து வாழ்ந்து, சில காலங்களுக்குப் பிறகு தனது மனைவியின் சமாதியைப் பார்க்க வந்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சமாதியியல் ஈசல்புற்று ஒன்று வளர்ந்திருந்ததையும், அதில் படுக்கை பூசைகள் செய்யப்பட்டதையும் கண்டு அங்கு ஏதோ தெய்வத்தன்மை நிலவுவதாக நம்பிய அவரும் சடங்குகளைச் செய்து, படுக்கை போட்டுவிட்டு திரும்பவும் கொல்லம் சென்றுவிட்டார். கொல்லம் திரும்பிச் சென்று நண்பர்களிடம் இந்நிகழ்ச்சியையும் தான் கண்ட புற்றையும் பற்றிக் கூறினார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இதில் ஏதோ தெய்வீக சக்தியிருப்பதாக அவர்கள் கருதினார்கள். இம் மூடநம்பிக்கையால், பொன்னம்மாள் “பகவதியானாள்”. இவள் கொலை செய்யப்பட்டு விட்ட இடமான அப்பனங்காட்டிற்கு ஊர்மக்கள் பொதுவாக செல்வதில்லை. அங்கு பொன்னம்மாள் பேயாக உலவுவதாக பல வதந்திகள் அவிழ்த்து விடப்பட்டன. பிறகு அவ்விடத்தை “பொன்னம்மை மாண்ட காடு” என்று கூறலாயினர். இந்த மாண்டக் காடு நாளடைவில் மருவி “மண்டைக்காடு” என்றாகிற்று, இவ்வரலாறு இன்று முற்றிலுமாக ‘பகவதியாளாள்’ என்பதை விட ஆக்கப்பட்டாள் என்று கூறுவதே உண்மைநிலமை.

சாதிக் கொடுமையின் உக்கிரத்தால், கொல்லத்திலுள்ள சேரமர் மற்றும் புலயர் சமூகத்தாருக்கு சாதி இந்துக்களின் கோவில்களில் கடவுள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் அது, எனவே வருடத்திற்கு ஒருமுறை அம்மக்கள் சிறிது சிறிதாக பொன்னம்மையின் கணவன் அனந்தவனுடன் சேர்ந்து மண்டைக்காட்டுக்கு வந்து, பொன்னம்மையின் கணவன் அனந்தவனுடன் சேர்ந்து மண்டைக்காட்டுக்கு வந்து, பொன்னம்மையின் சிதற்புற்று சமாதியை தரிசித்து பூஜைகள் செய்து, படுக்கையிட்டு வழிபடத் தொடங்கினர். நாளாவட்டத்தில் இது பிரசித்திப் பெற்ற பெண்களின் புண்ணியதலமாக ஆகிவிட்டது. அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் சாரை சாரையாக வந்து பலவிதமான பூசைகளும், படையல்களும், படுக்கைகளும் காணிக்கைகளும் செலுமத்தி பொன்னம்மையை வழிபடத் தொடங்கினர். நாலு திசைகளுக்கும் இதன் கீர்த்திப் பரவிடவே பருத்திவிளை நாடார்கள் இவ்விடத்தை பராமரிக்கத் தொடங்கினர். இத்துடன் தொடர்பு படத்திப பல ஜதீகங்களையும் பக்தர்களால் பரப்பப்பட்டது. புலையர் சன்னியாசினிகளும் மண்டைக்காடு பொன்னம்மையின் சமாதிப்புற்றுக்கு உன்னத மமையை உருவாக்கினார்கள். இதன் பயனாக வருவாய் அதிகரிக்கவே, மண்டைக்காட்டைச் சுற்றியுள்ள சாதி இந்துக்கள் இக்கோயிலை நாடார் சமுதாயத்திடமிருந்து பிடுங்கிட திட்டம் வகுத்தனர். அதன் பயனாக நாடு சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இவ்வாலயத்தை அன்றைய திருவிதாங்கூர் திவானாக இருந்த சர். சி.பி. இராமசாமி ஐயர் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு விட்டுக் கொடுக்கும்படி நாடார் சமூகத்தை நிர்ப்பந்திக்கவே கோவில் திருவிதாங்கூர் தேவசுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குமரி மாவட்டம் பிரிந்து தமிழகத்துடன் இணைந்த பிறகு இதன் நிர்வாக பொறுப்பு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறைக்கு கை மாறியது.

இவ்வாறாக பருத்திவிளை பனை ஏறும் தொழிலாளி அனந்தனின் மனைவி பொன்னம்மாள் நாடாத்தி மாண்டகாட்டை இன்று ‘மண்டைக்காடு’ என்றும் அவள் மேல் வளர்ந்த சிதற்புற்றை ‘பகவதி அம்மன்’ என்றும் நாமகரணம் பெற்று அது மண்டைக்காடு பகவதி அம்மன் சேத்திரமாக இன்று ஆக்கப்பட்டிருப்பதைப் பார்த்து நாடார் சமுதாயம் பொறாமைப்பட்டாலும், இது நாடார் இனத்தவரின் உயர்வைக் காட்டும் இன்னொரு சின்னமாக அமைந்திருப்பது சிறப்பேயாகும். ஆனால் ஆதிக்க இனத்தவர்கள் இத்தலத்திற்குப் பல்வேறு தலப்புராணங்களைப் புதைந்து இதனுடைய உண்மை வரலாற்றை முற்றிலுமாக மறைத்து விட்டனர். அவர்களின் பணியே உண்மைகளை மறைப்பதும், பொய்யைப் புனைவதும் தானே.

இதன் வரலாற்றை எவ்வாறெல்லாம் திரித்து எழுதுகிறார்கள் என்று சற்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இதே போன்று நாகர்கோவிலிலைத் தொட்டடுத்த ஊரான புத்தேரியில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றும் உள்ளது. அதைக் குறித்து திரு.ஆர்.வி. ராமநாதபிள்ளை என்பார் தினமலர் வாரமலரில் 30.3.97-ல் எழுதிய ஒரு சிறு கட்டுரையின் சுருக்கத்ததை இங்கு எடுத்துரைப்பது பொருந்தும். ‘புத்தேரி’ ஊரில் யோகீஸ்வரமுடையார் ஆலயமும், அவர் மீது புற்று எழுந்த வரலாறும் சுவையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தேரி என்ற ஊர் சோலைவனமாக இருந்தமையால், மக்கள் இவ்விடத்தை கால் நடைகளுக்கு மேய்ச்ல் நிலமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்தச் சோலைவனத்தில் (தானாகவே) தோன்றிய ‘பூவா’ என்ற சாஸ்தாசிலைக்கு ஒரு பெரியவர் அனுதினமும் பூஜை செய்தும், அவ்விடத்து தவம் செய்தும் வந்தார். அவ்வூர் மக்கள், நாளாவட்டத்தில், இப்பெரியவர் ஒரு நாள் சமாதியாகிவிட்டார். அவரின் பூத உடலை அவ்விடத்தில் சமாதி வைத்தனர். அவரின் சமாதியில் பிறகு ஒரு சிறு ஈசற்புற்று வளர்ந்தது. வழக்கம் போல் இச்சோலைக்கு மேய்சசலுக்காக கால்நடைகளின் கால்குளம்பாலோ, அல்லது கொம்பினாலோ சிதைக்கப்பட்ட அப்புற்றிலிருந்து ரத்தம் வந்ததாம். தவிரவும் இப்புற்று வளரத்தொடங்கி தொடர்ந்து வளர்ந்து வந்ததாம். இன்று அதன் உயரம் சுமார் 25 அடியாகக் காணப்படகிறது. இப்புற்றின் வளர்ச்சியையும், அதில் இரத்தம் வடிந்தததையும் கேள்விப்பட்ட பக்கத்து ஊர்மக்கள் சோலையில் அமைந்திருந்த சாஸ்தாவையும் முனிவராகிய யோகீஸ்வரரையும், வழிபடுவதற்காக அடிக்கடி சோலைக்கு வந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒரு சிறிய ஊரே உருவாகி விட்டது.

இவ்வூருக்குத் தெற்கு பாகம் ஏரியால் சூழப்பட்டிருப்பதாலும், ஏரிக்கரையில் புற்று வளர்ந்ததாலும் ஊருக்கு ‘புற்று ஏரி’ என்ற பெயரும் வந்ததாம். காலப்போக்கில் இந்த ‘புற்று ஏரி’ மருவி ‘புத்தேரி’ அயிற்று. அதே போன்று இந்த யோகீஸ்வரர் பிற்காலத்தில் ‘நயினார் யோகீஸ்வரமுடையவார்’ என்ற பெயருடன் சாஸ்தாவாகி, வருடம் தோறும் பங்குனி உத்திரம் முடிந்த பத்தாவது நாளில் திருவிழா ஒன்றும் தொடங்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக நடந்து வருகிறது.

எனவே மண்டைக்காட்டில் பொன்னம்மையின் சமாதி மீது சிதற்புற்று வளர்ந்தது போன்று, புத்தேரியிலும் அப்பெரியவரின் (பெயர் தெரியவில்லை) சமாதியிலும் சிதற்புற்று ஒன்று வளர்ந்திருக்கிறது. இரண்டு தலங்களும் புண்ணிய தலங்களாக கருதப்பட்டு மக்கள் வழிபடத் தொடங்கினர். இவ்விடங்கள் இப்போது புண்ணிய தலங்களாக காட்சி தருகிறது. எனவே புற்று என்பது எந்த திடப்பொருள் மீதும், தானாகவே வளரக்கூடிய தன்மையுடையது என்றறிக. ‘தட்டி வைக்காவிட்டால் புற்று வானளவு வளரும்’ என்றொரு சான்றோர் வாக்கும் தமிழர்களிரடயே பேசப்படுவது உண்டு. ஆரல்வாய்மொழிக்கு கிழக்கு காவல்கிணறு சந்திப்பு வரையிலும், மகேந்திர கிரி மலை அடிவாரத்தில் பயோனியர் குடும்பத்தாருக்குச் சொந்தமான புளியந்தோப்புகளில் இம்மாதிரியானபெரும் புற்று மலைகளை இன்றும் நாம் பார்க்கலாம்.

தவிரவும் மண்டைக்காட்டு பகவதி சேத்திரத்திற்கு இன்று கற்பிக்கப் பட்டிருக்கின்ற பல தலபுராணங்களைக் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாதாகும். “மண்டைக்காடு கோவில் வந்த வரலாறு” என்ற தலைப்பில் திருமதி. கல்யாணி ராமகிருஷ்ணன் பி.ஏ., அம்மையார் தரும் விளக்கத்தின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

இக்கோவிலில் அருள் பாலிக்கின்ற பகவதி அம்மனைப் பற்றி பல ஜதகங்களைக் கூறுகின்றனர். இக்கோயில் தோன்றுவதற்கு முன், இவ்விடத்தில் புல்வெளிகளைக் கொண்ட, குடியேற்றமில்லாத குளற்றிக்காடாக இருந்ததாம். அருகாமைக் கிராமங்களிலிருந்து ஆடுமாடுகளை, மேய்ப்பதற்காக சிறுவர்கள் இங்கு வருவதுண்டு. இவ்விடத்து தவநிலையிலிருக்கும் முனிவர்கள் மீது நாகப்பாம்புகள் படியிருக்கும் புற்றுகள் (சிதற்புற்றுகள்) (ஈசற்புற்றுகள்) காணப்பட்டனவாம். ஒரு நாள் ஆடு ஒன்றின் கால் குளம்பு பட்டு உடைந்த ஒரு புற்றிலிருந்து ரத்தம் கசியக்கண்டனராம். செய்தி பரவிடவே சுற்று வட்டார மக்கள் அதை நாகப்புற்று எனக் கருதி அதற்குத் தெய்வ சக்திகள் இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொண்டு தீபங்கள் ஏற்றி வழிபடவும் தொடங்கி விட்டனர்.

சிறிது காலத்தில் அப்புற்று தானாகவே வளர ஆரம்பித்தது. அது ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டவேளையில் அதன் மேல்பகுதியில் கண்கள், காதுகள், மூக்கு, இதழ்;கள், நெற்றி, போன்ற மனித இயல்புகளைக் கண்ட பக்தர்கள் ‘உன் வளர்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள். உனக்குக் கோயில் கட்டி வழிபடுகிறோம். என்று வேண்டிய படியால் அது தான் வளர்ச்சியை நிறுத்திக் கொண்டதாம். இதைக் கேள்வியுற்ற கேரள மன்னன் (யார் என்ற விவரமில்லை) அதற்கு கோவில் கட்டினாராம். ‘மாடு மேய்க்கும் சிறுவர்கள் முதலாவதாக புற்றில் கண்ட ரத்தக் கசிவு நாளான மாசித் திங்கள் கடைசி செவ்வாய் கிழமைக்கு 10 நாட்கள் முன்னால் கொடியேற்றப்பட்டு மண்டைக்காடு கொடை நடத்தப்பட்டு வருகிறதாம்.(நன்றி. கதிரவன் நாள் 9.3.98)

இத்தல வரலாற்றாசிரியர், இவ்வூருக்கு மண்டைக்காடு என்ற பெயர் எவ்வாறு வந்தது என்றும் அதில் எழுந்தரளியிருக்கின்ற பகவதிக்கு மண்டைக்காட்டுப் பொன்னம்மை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்கிற புராணம் அல்லது வரலாறுகளைச் சற்றேனும் கூறவில்லை. இதைக் குறித்து விவரம் தந்திட அவர்களுக்கு மனமில்லையோ, அல்லது அதன் உண்மையை மறைக்க வேண்டுமென்று எண்ணினரோ? என்பதை நம்மால் ஊகிக்க இயலவில்லை.

இது தவிர திரு. ஏ.பி. தம்பி அவர்கள் எழுதி வெளியிட்ட ‘மண்டைக்காடு திருக்கோவில் என்று சிறுநூலில் ‘தலச்சிறப்புகள்’ என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறார். (சுருக்கம்)

சிவபெருமானின் கட்டளைப்படி பூலோக மக்களைக் காத்திடும் பொருட்டு பூமிக்கு வந்த தேவி ஸ்ரீ பத்திரகாளி பூலோகம் முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள் அரபிக்கடலோரத்தில் தனது தளபதியான நந்தி மகாதேவனுடன் வந்த பத்திரகாளியை, காற்றோடு கலந்து வந்த தேவியின் நாமம் தடுத்து நிறுத்தியது.. இதைக் கண்ட அன்னை தனது நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவர் யார்? என்பதை அறிய விருப்பம் கொண்டு குற்றிக் காக்க காட்சி தந்த அம் மண்டைகாட்டை நோக்கி விரைந்தார்கள். அங்கே, பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘பைரவர்’ என்ற சித்தர் நாற்பத்தெட்டு கோணங்களைக் கொண்ட ஸ்ரீதேவி சகத்தை அமைத்துக் கொண்டு அதில் அமர்ந்து தேவியின் நாமங்களைக் கூறி தியானத்தில் அமர்ந்திருந்ததை தேவியார் கண்டார்கள்.

பல ஆண்டுகளாக இவ்வாறு தியானத்தில் பைரவர் ஆழ்ந்ததினால் அவரது உடல் முழுவதுமாக மண்புற்று வளர்ந்து மூடி மறைத்து நாற்பத்தெட்டு கோணங்களுடைய சக்கரத்தோடு கூடிய ஒரு புற்றாகக் காட்சி அளித்தது. அவரது தவத்தின் வலிமையையும் சக்தியையும் உணர்ந்த அன்னை ஸ்ரீ பத்திரகாளி, அச்சித்தருக்கு காட்சியளித்தாள். அன்னையின் திருக்காட்சி காணப்பெற்ற சித்தர் பூரிப்படைந்து அன்னையிடம் ‘தான’ பூஜித்த நாற்பத்தெட்டு கோணங்களுடைய ஸ்ரீ சக்கிரத்தில் அமர்ந்து எல்லா மக்களுக்கும் அருள் பாலிக்குமாறு வேண்டினார் என்றும், தனக்கு இத்துடன் முத்தி கிடைத்திடவும் வேண்டினார். அன்னையும் அவ்வாறே வரமளிப்பதாகக் கூறிவிட்டு சக்கரத்தில் ஐக்கியமாகிவிட்டார். (பக்கம் 7,8). அதன்பிறகு பைரவரை திடீரென காணவில்லை. ஈயினும் அவர் தவமிருந்த இடத்தில் மணல் புற்று ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்ட சிறுவர்கள் விளையாட்டாக அப்புற்றைக்காலினால் சிதைக்க முயன்றனர். அப்போது அப்புற்றிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. இதைக் கண்ட சிறுவர்கள் அப்பகுதியில் உடமைக்காரராகிய கொன்னைக்கோட்டு நாயர் பிரதானியிடம் எடுத்தியம் கொன்னக்கோட்டு நாயர் சமூகத்தார் மண்டைக்காடு அம்மனுக்குக்கோயில் கட்டி வழிகாடு நடத்தினார் என்பதாகத் தெரிகிறது.

மேலும் எழுதுகிறர். “கன்னியாசினி சமாதியான பின்பு அவர் ஸ்ரீ சக்கரம் வரைந்து வழிபட்டு வந்த இடமான சன்னியாசியின் சமாதியில் ஓர் புற்று வளர்ந்திருப் பதை மக்கள் கண்டனர். அப்புற்றின் வளர்ச்சியில் தெய்வீகத்தன்மையை உணர்ந்த கொன்னங்கோட்டு நாயர் சமூகாத்தார் கோயிலைக் கட்டியதாகவும் செவிவழி செய்தி கூறுகிறது.

அந்தவ புராண வரலாற்று ஆசிரியரும், இக்கோவிலுக்கு “மண்டைக்காட்டு பொன்னம்மை” என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று விளக்கவில்லை. தவிரவும் இவ்விடத்தை ‘மந்தைக்காடு’ அதாவது மந்தை மந்தையாக ஆடு மாடுகள் மேய்ந்ததினால் மந்தைக்காடு என்று பெயர் வந்ததாகவும் அது மருவி மண்டைக்காடு என்றாகியதாவும் இவர் கூறுகிறார். ஆனால் மக்கள் குடியேற்றம் இல்லாத இப்பகுதியில் கற்றாளை, புன்னை, ஆல், வேம்பு, அரசு வளர்ந்து நின்ற இந்த மணல் பரப்பில் முட்செடிகளும் வளந்து சூரிய வெப்பத்தால் அங்கு யாரும் செல்ல முடியாத ஒரு பகுதியாக இருந்ததும், அப்படிப்பட்ட ஓர் பகுதியில் மந்தை மந்தையாக ஆடு மாடுகளை யார் தான் மேய்க்க போவார்கள். அப்படி மேய்ப்தற்கு அங்கு யாருக்கு ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்களா என்ற விவரவும் கூறப்படவில்லை. அவ்வாறு ஆடு மாடுகள் வளர்ப்பது நாயர் தறவாடுகளின் தொழிலுமல்லவே. அவைகள், வெளியூர்களிலிருந்து வருவதற்கும் அன்று சாத்தியமில்லை. ஏனெனில் வெளியூர் ஆட்டு மந்தைகள் வயற்காடுகளில் மட்டுமே மேய்ச்சலுக்காக கொண்டு வருகிறார்கள். மண்டைக்காட்டில் வயல்வெளிகள் அன்றைய நாட்களில் இருந்ததற்கு சான்றுகள் எதுவும் இல்லை. தவிரவும் பைரவர் தவ மிருந்த இடத்தில் காணப்பட்ட வக்கிரரூபமுடைய புற்றுடன் அவரையும் திடீர் என்று காணவில்லையாம். பிறகு அவர் தியானம் செய்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்ததாகவும் கூறுகிறார். இவ்வாறு கூறி நாயர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காகவே இவ்வித தலப்புராணத்தில் இவர் எழுதியதாகவும் ஊகிக்கலாம். தவிரவும் ‘பைரவர்’ மறைந்த இடத்தில் தோன்றிய சிறுமணல் புற்றை சிறுவர்கள் தட்டி விடவே இரத்தம் வழிந்ததாகக் கூறுகிறார். ‘பைரவர்’ பதினெட்டு சித்தர்களின் ஒருவர் எனவும் நூலாசிரியர் கூறுகிறார். 189 சித்தர்களில் ‘பைரவர்’ என்ற ஒருவர் இல்லை என்பதற்கு தஞ்சை சரஸ்வதி மகால் பிரசுரித்த ‘பதார்த்த குணபாடம்’ என்ற சித்த மருத்துவ நூலில் 15-16ம் பக்கங்கள் சான்று பகருகிறது. தவிரவும் இன்று காணப்படுகின்ற இம்மண்புற்று சன்னியாசினியின சமாதியில் தான் வளர்ந்ததாகவும், பிறகு அதன்மேல் நாயர் குடும்பத்தார் கோயில் கட்டியதாகவும் ஆசிரியர் கூறுகிறார். ஆனால் இங்கு கோயில் கட்டினது சேளமன்னன் என்றே திருமதி. கல்யாணி ராதாகிருஷ்னன் அம்மையார் எழுதியிருக்கிறார். எனவே இதன் உண்மையான தவவரலாறு வேறொன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பது இவைகளினால் உறுதியாகிறது.

நான் மண்டைக்;காடு பொன்னம்மை திருக்கோயிலின் தெய்வீகத் தன்மையைக் குறித்து மறுகருத்து கூறுவதற்காக இவைகளை எழுதவில்லை. அதன் வரலாறுகளில் காணப்படுகின்ற முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்று ஆராய்வதே இதன் நோக்கமாகும். ஒரு உண்மையை மறைப்பதற்காக அல்லது திரிப்பதற்காக முற்படுகின்ற போது அங்கு சில மூடநம்பிக்கைகளையும் (superstition) அதற்கு உகந்தார்ப்போல் சில நிகழ்சிகளையும் கலந்து கூறித்தான் ஆக வேண்டும். இதுதான் ஆரிய மரபாக இருந்து வருகிறது. சில வரலாறுகள் எழுதுகிறார்களே தவிர அவைகள் ஏற்புடையவைகளாக எவரும் எழுதவில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர்களும் உண்மைகளை அப்படியே மூடி மறைத்து விட்டு அவ்விடத்து ஒரு ஆசிரியமாயையை புகுத்தியிருக்கிறார்கள் என்று எண்ண இடமிருக்கிறது.

மூன்றாவதாக “மாதவியின் அற்புதம்” என்ற தலைப்பில் திரு. ஆரியம. ஏ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் எழுதிய மண்டைக்காடு வரலாற்றில் சுருக்கத்தையும் இனி பார்ப்போம். (சுருக்கம்)

தேவலோக்தில் லோக கன்னிகைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்காக திருமால் (விஷ்ணு பகவான்) தேவாமிர்தம் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டார். இதை எங்கு தேடியும் கிடைக்காததால், கடைசியாக இந்த அமிர்தத்தை உண்டு கொழுத்திருந்த ஒரு பிராமணனையும், பிராணத்தியையும், பிடித்து வந்து விஷ்ணுவின் முன் நிறுத்தினார்கள் தேவ கணங்கள். விஷ்ணுவானவர் பிராமணத்தியை பெண் பனைமரமாகவும், பிராமணனை ஆண் பனைமரமாகவும் மாற்றி, மக்களுக்குப் பனம்பால் கிடைக்க வேண்டுமென்று கட்டளையை பிற்பித்தார். இச்சிறப்புடைய பனைமரத்தை (பிராண – பிராமணத்தியை) ஏறும் தொழிலாளி அவரின் கன்னி மகளான பொன்னம்மை, இறக்கி வைக்கப்படும் பதநீரை வேறு பானையில் பகிர்ந்து வீட்டிற்கு எடுத்து வருவது வழக்கம். சில நேரங்களில் நிறைத்து வைத்திருக்கும் பதநீரை நரி ஒன்று திருட்டுத்தனமடாக குடித்து விட்டு பானையையும் உருட்டி விட்டுச் சென்று விடுமாம். ஒரு நாள் பனை உச்சியில் இருந்த பனையேறி நரி பானையை உருட்டுவதைக் கண்டு விட்டார். கோபமடைந்த அத்தொழிலாளி ஆவேசமாக பாளையை சீவும் அரிவாளை (கூர்மையான ஆயுதம்) எடுத்து நரியை இறங்கியதும் கண்ட காட்சி கோரமானதாகியிருந்தது. நரிக்கு வீசிய அரிவாள் குறி தவறி தனது மகளின் தலையில் ஆழப்பதிந்து, ரத்தம் பீறிட்டு ஓடுவதைக் கண்டார். அவர் தனது மகளைப் பார்த்து ‘பொன்னம்மை’ மண்டையைக்காட்டு அம்மா என்று தடுமாற்றத்துடன் கேட்டார். இந்த நிகழ்ச்சியால் தான் அந்த இடத்திற்கு ‘மண்டைக்காட்டம்மன்’ என்ற பெயர் வந்ததாம்.(நன்றி கதிரவன் 9.3.98)

நரி பதநீரை (அக்கானி) குடிக்காது என்பதையும் நாய் கள்ளை (சோமபானம்) அருந்தாது என்ற விவரமும் கட்டுரையாளருக்குத் தெரியாது என்று எண்ணுகிறேன். பிள்ளைவாளுக்குப் பனையைக் குறித்து என்ன தெரியுமா?

இதனடிப்படையில் தான் மண்டைக்காட்டம்மன் என்ற பெயர் வந்ததாக கட்டுரையாளர் கூறுகிறார்.

தவிரவும் பொன்னம்மை என்ன ஆனாள் என்றும், அவ்விடத்து 30 அடி உயரமுடையப் புற்று எவ்வாறு வந்தது என்பதற்கான விவரங்களையும் இவர் தரவில்லை. தவிரவும் அரிவாளால் தலையில் ஆழமாக வெட்டுண்ட நிலையில் பொன்னம்மை ஏதாவது அலறல் அல்லது ஓலமிட்டாரா? என்றும் அவர் கூறவில்லை. உயிருடன் இருந்திருந்தால் அவள் அலறியிருப்பாள். ஆனால் அவள் இறந்து விட்டதாகவும் ஆசிரியர் கூறவில்லை. உயிருடன் இருந்தமையால் தானே பனையெறி நிதானமாக ‘பொன்னம்மை மண்டையைக் காட்டம்மா’ என்று கூறியிருக்க வேண்டும். எனவே இவைகளை அவர் மறைத்து விட்டார் என்று ஊகிக்கலாம். உண்மையைச் சொல்லிவிட்டால் அதன் மகிமையின் சொந்தம் திசை திரும்பிடும் என எண்ணியிருப்பார் போலும்! ஆயினும் அவர் சில உண்மைகளைப் புராணக்கலவையுடன் நமக்குத் அதரத் தவறவில்லை. பிராமணனையும், பிராமணத்தியையும் ஆண் மற்றும் பெண் பனைகளாக மாற்றியதால் தான் மனிதர்களுக்கு தேவாமிர்தம் தரும் கற்பக மரமான பனைமரம் உலகில் உண்டாயிற்று என்ற மூடநம்பிக்கையை ஆரிய மயமாக்கித் தருகிறார் என்பதே அவரின் கட்டுரை தருகின்ற பாடம். ஆக, பனைமரம் தான் கற்பக மரம் என்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். தவிரவும் பனைமரங்கள் பிராமணன் மற்றம் பிராமணத்தியின் குலம் என்று கூறவதே இவரின் நோக்கமாவும் இருக்கலாம். அனைத்து நல்ல காரியங்கள் மற்றும் நல் பொருட்களும், உலகத்தில் ஏற்படுவது பிராமணர்களினால் தான் (ஆரியமயம்) என்பதைக் கூறுவதற்காகவே இப்படி ஒரு திரிப்பு புராணம் இங்கே கூறப்பட்டிருக்கிறது. என்பதே உண்மை. அப்படியிருக்க ஆண்பாலும் பெண்பாலும் சேர்ந்து ஒரே மரமாக விளங்குகிற ‘தென்னை’ மரம் எவ்வாறு உற்பத்தியானது என்று கூறவில்லையே. அம்மரத்திலிருந்தும் சோமபானம் (கள்) கிடைக்கிறதே. இது எந்த பிராமணன் அல்லது வேர்களின் சேர்க்கையால் உண்டாயிற்று. ஒரு வேளை திருமாலும் ஈசனும் ஒன்றாக சேர்ந்ததில் பயனாக இம்மரம் உண்டாயிற்றோ. எனவே இவர்கள் இருவரும் ஒன்றாக (ர்ழஅழ ளுநஒரயட)ல் இணைந்ததாக புராணங்கள் கூறுகின்றனவே.

குமரி மாவட்டத்தில் கருங்கல் ஊர் அருகே மாங்கன்று விளையில் தங்கப்பன் என்பவரது தோட்டத்தில் 5 கிளைகளை கொண்ட அதிசய பனைமரம் ஒன்று உள்ளது. இதில் 3 ஆண் கிளைகளும், 2 பெண் கிளைகளும் உள்ளன.

(கதிரவன் 21.9.98)

இப்பனைமரம் மூன்று பிராமணனும் இரண்டு பிராமணத்தியும் ஒன்றாகக் கலந்து, திருமாலால் திருஸ்டிக்கப்பட்டது தானோ? எது எவ்வாறாயினும் திரு. பாலகிருஷ்ணபிள்ளை அவர்கள் மண்டைய காட்டு பொன்னம்மா என்ற தொடர் வாயிலாகப் பனையேறும் தொழிலாளிகளான நாடார் மக்களை ஆதரித்து எழுதியிருக்கிறார் என்பது வெளிப்படை. எனவே மண்டைக்காடு என்ற ஊருக்கும் அவ்வூர் தேவாலயத்திற்கும், நாடார் மக்களுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக் கொண்டு விட்டு பிற்பகுதிகளை வழக்கம் போல் மறைத்தும் விடுகிறார்.

இதனால் அறிய முடிவது என்னவெனில், அப்புற்றில் சமாதியாகிருப்பது அன்று மண்டையில் அடிக்கப்பட்டு இறந்து போன பொன்னம்மை நாடாத்தி தான் என்ற உண்மையே. ஆனால் ஒரே ஒரு திருத்தம், பொன்னம்மை அப்பனையேறியான அனந்தனின் மகளல்ல, மனைவியாகும். மனைவியை கொலை செய்திட்ட அச்சத்தினால் இவர் நாட்டை விட்டு வெளியெறி அன்றைய திருவிதாங்கூர் நாட்டு எல்கைக்கு அப்பால் அமைந்திருந்த கொல்லம் நாட்டிற்கு (தேசிங்க நாடு) ஓடி விட்டார். அங்கு திருவிதாங்கூர் மன்னருக்கு இறையாண்மை இல்லாததால் தன் மீது கொலை குற்றம் சுமத்தி அனந்தனை கைது செய்து தண்டனை வழங்க திருவிதாங்கூர் மன்னருக்கு இயலாது என்பதால் தான் அங்கு ஓடி ஒளித்துக் கொண்டார். என்னும் பல காலங்களாக இவரை எவரும் தேடாதிருந்ததினால் தைரியமடைந்து தனது மனைவியின் பிணம் என்ன அயிற்று என்று பார்த்து அறிந்து அவருக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்திட அப்பனங்காட்டிற்கு ரகசியமாக வருகை தந்தார் அனந்தன். வந்தவருக்கு அங்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. தனது மனைவி மரணமடைந்த இடத்தில் ஒரு புற்று மலை வளர்ந்திருந்ததைக் கண்டார். அந்த புற்று மலைக்குப் பூசைச் சடங்குகள் செய்யப்ட்டிருந்ததையும் அவர் கண்டார். அப்புற்றுகள் மனைவியின் சமாதியில் வளர்ந்திருந்ததையும் நிச்சம் செய்துகொண்டு அவரும் சடங்குகளைச் செய்துவிட்டு திரும்பவும் கொல்லம் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பொன்னம்மை மரணமடைந்த மாசி மாதம் 10-ம் நாள் தவறாமல் மண்டைக்காடு வந்து பூசை செய்யத் தொடங்கினார்.

இந்த மண்டைக்காட்டில் சமாதியாகி இருக்கின்ற பொன்னம்மை, பருத்திவிளை பொன்னையா நாடார் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவர். அதற்கு அடையாளமாக இப்போது நடக்கின்ற மண்டகப்டிகளை ஆராய்ந்தால் அறிந்து கொள்ளலாம். இங்கு நடக்கின்ற மாசிமாதத் திருவிழாவில் அம்மன் ஊர்வலத்துக்கு நடக்கின்ற மண்டகப்படியில், பருத்திவிளை வெள்ளையன் நாடார் குடும்பம், ஊர்வலத்துக்குத் தேவைப்படும் தீபமும், எண்ணையும் தருகின்றனர். பல்லக்கு பவனி வருவதற்கென்று கயிறு மண்டகப்படியை காரவிளை வழக்கறிஞர் சென் குடும்பம் செய்கிறது. பல்லக்குக்கு முன்பு கொடிபிடித்து முன் நடக்கின்ற உரிமை இன்று வரையிலும் ஆத்திமூடு குடும்பமே நடத்துகிறது. தவிரவும் அம்மனின் பல்லக்கை சுமக்கும் பணியை மட்டும் சேரமங்கலக் குடிமக்க (கிருட்டிணன் வகையினர்) ளே செய்கின்றனர். எனவே, இந்நடவடிக்கைகளினால், மண்டைக்காட்டு பகவதி திருமதி. பொன்னம்மாள் பருத்திவிளை வெள்ளையன் நாடார் குடும்ப பெண் என்பது மேலும் உறுதியாகிறது.

அவருடன் கொல்லத்திலிருந்து சினேகிதர்களும் அயல்காரரும் சிறுக சிறுகச் இவ்வை போகத்திற்கு வந்து சென்றனர். தவிரவும் அன்று திருவிதாங்கூரிலும், தொட்டடுத்து நாடுகளிலும் உள்ள புலையர்களுக்கு சாதி இந்துக்களின் கோயில்களில் சென்று இறைவணக்கம் செய்திட உரிமையில்லாதிருந்தது. சபரிமலைக்குக் கூட இவர்கள் போய் வர இயலாத காலமாகவும் இருந்தது. எனவே அதற்கு பரிகாரமாக கொல்லத்து புலையப் பெண்கள் இருமுடி அணிந்து மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர். நாளடைவில்  மண்டைக்காடு புலைய சமுதாயத்தினரில் சபரிமலையாயிற்று. இதைத் தொடர்ந்து அனேகர் அங்கு வரத்தொடங்கவே இச்சமாதி ஒரு ஸ்ரீபகவதி சேத்திரமாக உருவானது. வசூல் அதிகம் வரவே கேரள அரசு தேவசுவம் போர்டு அதை நாடார் குடுமப்பத்திலிருந்து எடுத்துக் கொண்டது. பலவிதமான பூசைகளும் படைப்புகளும் மக்களைக் கவருவதற்காக இங்கு நடத்தப்பட்டு நாடுகள் அனைத்துக்கும் பிரபலமாக்கபட்டு விட்டது. ஆக பொன்னம்மை நாடாத்தி ‘மாண்டகாடு’ காலப் பழக்கத்தால் பிரபலமாகி அது ‘மண்டைக்காடு’ ஆகி இன்று அது ஒரு பகவதி சேத்திரமாக வளர்ந்திருக்கிறது. இதைக் குறித்து பலர் பலவிதமான தல புராணங்களை புனைந்திருந்தாலும் திரு. பால கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் இலைமறைவு காய் மறைவாக சொல்வதைப் போன்று இங்கு எழுந்தருளி அருள் பாலித்து நிற்கின்ற தேவி பொன்னம்மை ஒரு நாடார் குல பெண்மணியே என்பதை உறுதிப்படுத்துகிறார். தவிரவும் மண்டைக்காட்டு ஆலயம் பொன்னம்மையின் சமாதியில் கட்டப்பட்ட ஆலயம் என்பதற்கு எதிர் ஆதாரங்கள் இல்லை. இதே போன்று கும்பகோணத்துக்கு தொட்டடுத்த ஆலங்குளத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வலங்கைமான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு சீதா தேவி மாரியம்மன் கோயிலில் அருள் பாலித்து வருகின்ற பாடைக்காவடி மாரியம்மன் வீற்றிருக்கிறார்கள். இந்த மாரியம்மன் கோயிலும் ஒரு பெண் குழந்தையின் சமாதியில் கட்டப்பட்டதாகும். அதன் வரலாற்றைக் குறித்து குமுதம் வார இதழில் (7-12-2000) இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வலங்கைமான் அருகிலுள்ள புங்கஞ்சேரி அய்யனார் கோயிலில் அந்த அழுகுரல் கேட்டது. ஒரு பச்சைக் குழந்தையின் குரல் அதுவும் விடியற்காலையில் வாசல் தெளித்து கோலம் போட்ட தெரு பெண்களின் காதுகளிலும் அந்த அழுகுரல் கேட்டது. ஏதோ ஒரு விடியற்காலப் பறவையின் குரல் என்று எல்லோரும் நினைத்தார்கள். நேரம் ஆக ஆகக் குழந்தை அழுகுரல் உயர்ந்தது. தெருமக்கள் ஒன்று கூடினார்கள். கோயிலில் நுழைந்து பார்த்தால், பசியுடன் பாலுக்காக கதறி அழுது கொண்டிருந்தது. அழகான ஒரு பெண் குழந்தை. “நேத்து ராத்திரி பார்த்தேன். ஒரு அய்யரும் அவங்க வீட்டுக்கார அம்மாவும் இந்த குழந்தையை வச்சிட்டிருந்தாங்க. அவங்க குழந்தைதான் இது. ஆனால் அவங்களைக் காணோமே! ஆமா நானும் பார்த்தேன்” என்றபடியே ஒருத்தி குழந்தைக்கு பசும்பால் கொண்டு வந்தாள். பெற்றோரைத் தேடினார்கள், காணவில்லை. குழந்தையை என்ன செய்வது? அழகான குழந்தை, ஆனால் பெண் குழந்தை என்று கையாலாகாத யாரோ முணுமுணுத்தார்கள். அந்தக் கும்பலில் வலங்கையமான் வரதராஜம் பேட்டைத் தெருவைச் சேர்ந்த ஒரு தம்பதியும் இருந்தனர். அய்யனாரை வணங்க வந்தவர்களுக்கு இப்படியொரு காட்சி. “குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்” குழந்தை கை மாறிற்று. வலங்கையமான் தம்பதியினர் மகிழ்ச்சியோடு தங்கள் வீடு சென்றார்கள். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

தேவதை மாதிரி வளர்ந்து வந்தது குழந்தை. அதுவந்த அதிர்ஸ்டம், வீட்டிலும் வளமை மிகுந்தது. சந்தோஸம் உயர்ந்தது. சிறுமிக்கு இரண்டு மூன்று வயது இருக்கும்போது அந்த சம்பவம் நிகழ்ந்தது.

குழந்தைக்கு அம்மை கண்டது. ரோஜாப்பூ மாதிரி இருந்த குழந்தையின் உடலெங்கும் முட்கள்போல் அம்மைப்புள்ளிகள். வளர்ப்பு பெற்றோர்கள் துடிதுடித்துப்போனார்கள். சுpகிட்சை செய்தார்கள். இறைவனை வேண்டினார்கள். முடிவில் அந்த பிஞ்சு ரோஜாப்பூ நொயின் உக்கிரம் தாங்காமல் கருகிப்போயிற்று. கடைசியில் ஆழ்ந்த சோகத்துடன், அத்தம்பதியர் தங்கள’; வீட்டுக் கொல்லைப்புறத்திலேயே, அந்தப்பெண் சிசுவுக்கு சமாதி எழுப்பினார்கள். அங்கே கீற்றுக் கொட்டகை போட்டு குழந்தையை தெய்வமாகதத் தொழுது வந்தார்கள். குழந்தையை தெய்வமாக வணங்குவதை சிலர் வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் விளையாட்டுக்கு ஏதோ வேண்டிக்கொள்ள, வேண்டியதெல்லாம் நடந்தது. வியக்கத்தக்க வகையில் அப்பெண்குழந்தை தம் பக்தர்களுக்கு அருள் சுரந்து வளம் கொழிக்கச் செய்தாள். சீதளம் என்றால் குளிர்ச்சி. அம்மையில் குளிர்ந்து போனதால் சீதளா தேவி என்று அன்புடன் அழைக்கப்பட்டாள். சீதளாதேவிக்கு கோயில் எழும்பிற்று. புகழ் பரவிற்று. பாடைக்காவடி மாரியம்மன் ஆகிவிட்டாள்.

(ப்ரியா கல்யாணராம்ன-பாடைக்காவடி மாரியம்மன் – குமுதம் – நாள்

7-12-2000- பக்கம் 84 முதல் 87 வரை)

இந்த மாரியம்மன் கோயிலும் ஒரு பெண் குழந்தையின் சமாதியில்தான் எழுந்தள்ளது. அதே போன்று மண்டைக்காட்டு பகவதியம்மன் கோயிலும், பொன்னம்மை நாடாத்தியின் சமாதியில் தான் எழுந்திருக்கிறது. எனவே சமாதியகளில் கோயில்கள் எழுவது சாதாரணமான நிலையாகையால், மண்டைக்காட்டு பகவதிக் கோயிலும் அவ்வாறு தோன்றியதே என்பதில் ஐயமில்லை. பொன்னம்மை நாடாத்தி மாண்டகாடு மண்டைக்காடும் ஆயிற்று!

Advertisements

பதிவர்: Marshal Nesamony Father of Kanyakumari District

Marshal Nesamony Father of Kanyakumari District

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s